தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை !

சென்னை :
வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரைக் முன்னிட்டு, திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 18) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளை புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசின் செயல்களை பார்லிமென்டில் வலியுறுத்தி எடுத்துரைக்க வேண்டும் என்பதும், நிதி, மொழி, கல்வி உள்ளிட்ட துறைகளில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள் :

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உரிய பதிலை பார்லிமென்டில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தின் நிதி, மொழி மற்றும் கல்வியுரிமைகளை பாதுகாப்பதற்காக திமுக எம்.பி.க்கள் ஒருமித்த குரலாக பேச வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல் மற்றும் தமிழ் மொழியை புறக்கணித்து ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், “மத்திய பாஜக அரசின் கடந்த 11 ஆண்டுகள் என்பது மாநில உரிமைகளை பறிக்கும், மதவாதத்தைக் கட்டியெழுப்பும், ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் காலமாக அமைந்துள்ளது. இதற்கெதிராக, நமது எம்.பி.க்கள் மக்கள் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் திட்டமிடலோடு திமுக எம்.பி.க்கள் பங்கேற்கும் வகையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version