சென்னை மாநகரத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்படும் செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) அறிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலையை வந்தடையும் புதிய 2000 மில்லி மீட்டர் விட்டமுடைய பிரதான குடிநீர் குழாயை, தற்போது பயன்பாட்டிலுள்ள பழைய குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
குடிநீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் மண்டலங்கள்:
மண்டலம் 7 – அம்பத்தூர்
மண்டலம் 8 – அண்ணா நகர்
மண்டலம் 9 – தேனாம்பேட்டை
மண்டலம் 10 – கோடம்பாக்கம்
மண்டலம் 11 – வளசரவாக்கம்
மண்டலம் 12 – ஆலந்தூர்
மண்டலம் 13 – அடையாறு
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகள்
இடைநிறுத்தம் செய்யப்படும் காலஅளவு :
ஜூலை 30 காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு 10 மணி வரை
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் :
குடிநீர் வழங்கும் குழாய்கள் மூலமாக நீர் பெற முடியாததால், மக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன், அவசர தேவைக்காக குடிநீரை லாரி வாயிலாக பெற “Dial for Water” சேவையைப் பயன்படுத்தலாம். இந்த சேவையைப் பெற, மக்கள் https://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மாற்று ஏற்பாடுகள்:
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு, தெரு நடைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் மூலம் லாரிகள் வழியாக நீர் விநியோகம் வழக்கம்போல தொடர்ந்து நடைபெறும் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.