சென்னை, ஜூன் 9 : சென்னை கோவிலம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ச்சியாக வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தீவிர அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோவிலம்பாக்கம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) என்பவரது வீட்டின் வாசலில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென பெட்ரோல் குண்டை வீசி தப்பிச் சென்றனர். இதனால், அங்கு நின்றிருந்த பிரதீப் (11) என்ற சிறுவன் காயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வினோத் குடும்பத்தினர் உடனடியாக மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் 7வது தெருவில் வசிக்கும் நித்தியானந்தன் (40) மற்றும் பெரியார் நகர் பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. அடையாளம் தெரியாத நபர்கள் வீசிவிட்டு தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெறுகிறது.
ஒரே வாரத்தில் கோவிலம்பாக்கம் பகுதியில் மூன்று வீடுகள் குறிவைக்கப்பட்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதுடன், குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.