“சென்னை ரவுடிசம் சாம்ராஜ்யமாகிவிட்டது” – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

சென்னை: தலைநகர் சென்னை பல்லவன் சாலையில் இருவர் கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாரிமுனை–கலெக்டர் அலுவலகம்–நீதிமன்றம் போன்ற முக்கிய பகுதிகள் அருகில் கத்திகளுடன் துரத்தி விரட்டிக் கொண்ட இரு கும்பல்களை மக்கள் நேரில் கண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையிலும் இருவர் கத்திகளுடன் மோதிக்கொண்டது தொடர்பாக வீடியோவும், தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் குறிப்பாக சென்னை ரவுடிகளின் ஆட்சி மண்டலமாக மாறியுள்ளது. மக்கள் பாதுகாப்பு குறித்து அரசு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது,” என குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் காவல்துறை அமைச்சராக இருந்தும், தலைநகரின் முக்கிய சாலைகளில் ஆயுதத்துடன் கும்பல்கள் சண்டையிட்டது சட்டஒழுங்கின் சரிவு என்பதை அவர் வலியுறுத்தினார். “ரவுடிகள் கத்தியுடன் சாலையில் ஓடி சண்டை போடும்போது மக்கள் அலறி ஓடியதே இந்த ஆட்சியின் ‘சாதனையாக’ கூறிக்கொள்ளலாம்,” என்றும் அவர் விமர்சித்தார்.

திருச்சி பீமநகர் கொலை

மற்றொரு பதிவில், திருச்சி பீமநகரில் தஞ்சம் புகுந்த இளைஞர் தாமரைச்செல்வன் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடப்பாடி பழனிசாமி எடுத்துக்காட்டினார். காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தே தாக்குதல் நடந்திருப்பது, குற்றவாளிகளுக்கு எந்தத் தடையும் இல்லாத சூழ்நிலையை காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

“காவலர் குடியிருப்பில் புகுந்து கொலைசெய்யும் அளவிற்கு குற்றவாளிகள் தைரியம் பெற்றிருப்பது சட்டஒழுங்கின் முழு தோல்வி. மக்களை காப்பாற்றுவதில் நான்கரை ஆண்டுகளாக அமைச்சர் கவனம் செலுத்தவே இல்லை,” என அவர் கடுமையாக விமர்சித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version