வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் உலகப்புகழ் பெற்ற சர்வதேச கலை விழாவான ‘ரிவேரா 2026’, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கி மார்ச் 1 வரை விண்ணதிரும் கொண்டாட்டங்களுடன் அரங்கேறியது. இந்திய உயர்கல்வித் துறையில் விளையாட்டு மற்றும் கலைகளுக்கு விஐடி அளிக்கும் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சி, எஸ்.ஜெ.டி மைதானத்தில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஜெனிலியா தேஷ்முக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களின் உற்சாகக் குரல்களுக்கிடையே உரையாற்றினார். ஒரு நடிகையாக மட்டுமன்றி, வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோராகத் தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்ட அவர், மாணவர்கள் தங்கள் துறைகளில் நிபுணத்துவம் பெற்று தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வேந்தர் ஜி.விஸ்வநாதன் தனது தலைமையுரையில், விஐடி கல்வி நிறுவனம் கல்வியில் மட்டுமன்றி கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்று குறிப்பிட்டார். இம்முறை 30-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் 28 மாநிலங்களைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றது விழாவின் சர்வதேச தரத்தை உறுதிப்படுத்தியது. 150-க்கும் மேற்பட்ட பல்வேறு போட்டிகளில் திறமைகளை நிரூபித்த வெற்றியாளர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களில், கலைப் பிரிவில் சென்னை விஐடி பல்கலைக்கழகமும், விளையாட்டுப் பிரிவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் முதலிடம் பிடித்து கோப்பைகளைத் தட்டிச் சென்றன.
இந்த நிகழ்வில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவின் இறுதிக் கட்டமாக டி.ஜே.க்கள் ஷான் மற்றும் ரித்விஷ் ஆகியோரின் அதிரடி இசை நிகழ்ச்சி இளைஞர்களைத் தாளம் போட வைத்தது. ரிவேரா ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில், மாணவி அபிநயாவின் நன்றியுரையுடன் 2026-ஆம் ஆண்டின் இந்த கலைத் திருவிழா இனிதே நிறைவுற்றது.

















