கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம். ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் தேரில் எழுந்தருள செய்யப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. காவிரிக்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 26-வது தலமாகும். சிவபெருமான் காமனை நெற்றிக்கண்ணால் எரித்த தலம். தீர்க்கவாகு முனிவர் இறைவனை அபிஷேகத்திற்கு கங்கை நீரை விரும்பித் தமது கைகளை நீட்ட கைகள் நீளாது குறுகியமையால் இவ்வூர் குறுக்கை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருகி கொற்கை என அழைக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவன் மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன ஐதீக நிகழ்வு கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று திரு தேரோட்டம் நடைபெற்றது.
திருத்தேரில் ஸ்ரீஞானாம்பிகை சமேத வீரேட்டேஸ் வரசுவாமி, விநாயகர்,முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கும், தேருக்கும் சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத்திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவாய நம, ஹர ஹர மகாதேவா எந்த கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்து செல்ல தேரோட்டம் நான்கு ரதவீதிகளும் சென்று நிலைக்கு வந்தது.
