மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் குருதி சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி சுத்திகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. இதன் மூலம் 70 நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 670 சுற்றுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவ பயனாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மையத்திற்கு கூடுதலாக டயாலிசிஸ் இயந்திரங்களை அமைத்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மன்னார்குடி ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து, உலகளாவிய ரோட்டரி தலைமையகம் மூலம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் குருதி சுத்திகரிப்பு மையத்திற்கு தேவையான டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர் சிஎஸ்ஆர் மேலாளர் சிவராமகிருஷ்ணன் ரோட்டரி துணை ஆளுநர் வெங்கடேஷ், சென்னை சன் ரைசிங் ரோட்டரி சங்க நிர்வாகி புண்ணியமூர்த்தி, மன்னை ரோட்டரி சங்க தலைவர் சிரில், மிட்டம் ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.85 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள், 10 கட்டில்கள், 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், அதற்கான 2 மின்மோட்டார்கள், 2 குளிர்சாதன இயந்திரங்களை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் விஜயகுமாரிடம் வழங்கினர் இதையடுத்து, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் குருதி சுத்திகரிப்பு மையத்தில் மேலும் 70 நபர்களுக்கு 670 சுற்றுகள் டயாலிசிஸ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய டயாலிசிஸ் மையமாக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ். மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

















