மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகன திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள நம்பர் ஒன் காந்திஜி சாலையில், தனியார் வணிக வளாகம் அருகே பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள், அதிகம் உள்ள இந்த பகுதியில் ஒரு தனியார் வணிகவளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை நடந்து வந்த ஒரு நபர் வாகனத்தின் மீது அமர்ந்து கால்களால் வாகனத்தில் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்கிறார். இது போல் கடந்த ஒரு வாரத்தில் 5 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. ஆனால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரியும் என்பதால், காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















