திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு DSP தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர்.
திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு அந்த வழக்கை பரிந்துரை செய்து உத்தரவிட்டது.
மேலும் அஜித்குமாரின் கொலை வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும், அந்த அலுவலர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும்.
அனைத்து தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும், தடய அறிவியல்துறை அறிக்கையை 1 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமார் வழக்கை விசாரணை நடத்துவதற்காக டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான குழு இன்று மடப்புரம் கோவில் எதிரே உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் மேல் மாடியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் மூன்று அறைகளை விசாரணைக்கு தேர்வு செய்து உள்ளார்கள். இந்நிலையில் நேற்று அந்த அறையை சுத்தம் செய்து விசாரணைக்கு தேவையான அனைத்து உபகரங்களையும் வைத்து விசாரணை அறைகளை தயார் செய்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெற இருக்கிறது.