“சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டும் முன்னேற்றம் ஏற்படாது” – பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி:
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, பல எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மத்திய அரசை அழுத்தியிருந்தது. இந்த கோரிக்கைக்கு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார். “இது, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இணைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதேசமயம், மத்திய அரசின் நோக்கத்தைப் பற்றி சில கட்சிகள் சந்தேகம் தெரிவித்தும் உள்ளன.

இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணரும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

“சமூகம் குறித்து ஆழமாக புரிந்துகொள்வதற்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஆய்வுகள் ஆகியவற்றை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பீகாரில் நாங்கள் பார்த்ததுபோல், சாதிவாரி கணக்கெடுப்பை மட்டுமே செய்து விட்டால் அது சமூக முன்னேற்றத்திற்கு போதாது. அதன் முடிவுகளை அடிப்படையாக வைத்து, வளர்ச்சி நோக்கில் அரசு திட்டங்களை வகுப்பதே முக்கியம். புத்தகத்தை வாங்கினாலே அறிவாளியாக முடியாது. அதை வாசித்து, புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

சாதிவாரி கணக்கெடுப்பின் நடைமுறை மற்றும் அதன் பின்னணியில் அரசின் செயல்பாடுகள் தான், எதிர்கால சமூக முன்னேற்றத்திற்கு தீர்மானியாக அமையும் என்பதை பிரசாந்த் கிஷோர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Exit mobile version