நாட்டில் ஜாதி மற்றும் மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கின்றன என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தபோது, திருநெல்வேலியில் நடந்த ஆணவப் படுகொலை குறித்து கருத்து தெரிவித்த சீமான், “படித்து உயர்ந்தவர்கள் கூட இந்து மதம், ஜாதி ஆகிய உணர்வுகளிலேயே இருக்கிறார்கள். கல்வி அறிவை அளித்தாலும், அறத்தையும், மனிதநேயத்தையும் போதிக்கவில்லை. பள்ளியிலேயே சிறுவர்கள் மீது ஜாதி வெறி விதைக்கப்படுகிறது,” என்றார்.
அதேபோல், கல்வியின் வியாபாரமயமாக்கல் இளைஞர்களிடம் சமூக உணர்வை வளர்க்காமல் விட்டுவிட்டதாகவும், இவ்வாறான கொடூர சம்பவங்கள் கல்வி அமைப்புகளின் தோல்வியைக் காட்டுவதாகவும் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மதத்தை அரசியலாக்குகிறார்கள் என்றும், “நாட்டின் உள்துறை அமைச்சர் இந்திய மக்களின் ஒற்றுமையை பேச வேண்டிய இடத்தில், ஹிந்து மக்களின் ஒற்றுமையை மட்டுமே பேசுகிறார். இது அரசியல் வெறுப்பை ஊக்குவிக்கிறது,” என விமர்சித்தார்.
“இந்திய அரசியலில் மத உணர்ச்சியும், ஜாதி உணர்ச்சியும் தான் முக்கியக் காரணியாக உள்ளன. இது ஒரு நாட்டை ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தும்,” என அவர் எச்சரித்தார்.