தவெக புஸ்ஸி ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு – மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரின் பணியில் தடங்கல் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, வழக்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வந்தடைந்த புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர் விஜயின் பிரச்சார அனுமதி கோரும் கடிதத்துடன் வந்திருந்தார். அப்போது, கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்றனர். வாகனங்களை சாலையில் குறுக்கு நிறுத்தியதால் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்பட்டதாக கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கை ரத்து செய்ய புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்ததை ஐகோர்ட் கிளை எடுத்துக்கொண்டது. வழக்கின் விசாரணையில், இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ல் நடைபெறவுள்ள நிலையில், தவெக முதல் முறையாக களமிறங்கத் தயாராகி வருகிறது. இதற்காக கட்சி தலைவர் விஜய், மதுரை மற்றும் நெல்லை மாநாடுகளை நடத்தியுள்ளார். தற்போது, “உங்கள் விஜய்… வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திருச்சியில் இருந்து தனது முதல் அரசியல் பிரச்சாரத்தை நாளை தொடங்கவிருக்கிறார். ஒரே நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் விஜய் பிரச்சார உரையாற்றவிருக்கிறார்.

இதனால், தவெக அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது உள்ள வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு கிடைத்திருப்பது கட்சிக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version