நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சாதகமான காலநிலையைப் பயன்படுத்தி, கேரட் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை பிரதானமாகப் பயிரிடப்படுகின்றன. கடந்த மாதம் நிலவிய புயல் மற்றும் மிதமான மழையின் காரணமாக, தற்போது விளைநிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவாறு போதிய ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகள் கேரட் விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக: கூக்கல் தொரை, மசகல் கேர்க்கம்பை, காவிலோரை குருகத்தி, நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களில் கேரட் பயிரிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமவெளிப் பகுதிகளில் உள்ள காய்கறி மண்டிகளில் தற்போது கேரட்டிற்குச் சாதகமான விலை கிடைத்து வருகிறது. இதனால், ஏற்கனவே கேரட் பயிரிட்டிருந்த விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் கேரட்கள் சுத்தம் செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் மற்றும் வெளிமாநிலச் சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.மண்ணில் ஈரப்பதம் சரியாக உள்ளதால், தற்போது பயிரிடப்படும் கேரட்கள் நல்ல தரத்துடனும் அதிக மகசூலுடனும் இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

















