வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் சென்ற கார் மயிலாடுதுறை அருகே விபத்து

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் சென்ற கார் மயிலாடுதுறை அருகே சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்து: காரில் பயணித்த மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்; அரசு மருத்துவமனை சிகிச்சை ; பெரம்பூர் போலீசார் விசாரணை:-

சென்னை கேளம்பாக்கம் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் (47) தனது குடும்பத்தினருடன் எர்டிகா காரில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் – திருவிளையாட்டம் பிரதான சாலையில் உள்ள கடலி கிராமம் அருகே சென்றபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, காரில் இருந்த 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் அந்தோணி ராஜுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதாவுக்கு வலது காலில் எலும்பு முறிவும், மகன் சத்யராஜுக்கு நெஞ்சுப் பகுதியில் உள்காயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் பிரேமாவுக்கு இடது கையில் எலும்பு முறிவும், லிபியா ஜாய்சிக்கு உள்காயமும் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் அந்தோணி ராஜின் மகளும், இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவியுமான ஹரிணி (20) மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் சிலர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காரை அந்தோணி ராஜின் மகன் சத்யராஜ் ஓட்டி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி சென்றபோது நிகழ்ந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version