“11 ஆண்டுகளாக பிரதமராக செயல்பட்டு சிறந்த ஆட்சி மற்றும் வரி சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி என திருவாமாத்தூரில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புகழாரம்.
விழுப்புரம் திருவாமாத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பங்கேற்று பேசினார்.
அவர் தனது உரையில், “தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே நன்றாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீண்டும் நகை கடன் தள்ளுபடி செய்வோம் என சொல்லி மக்களை ஏமாற்றக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தார். கொரோனா காலத்திலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
மேலும், “சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா விற்பனை போன்ற பிரச்சினைகள் குறித்து திமுக அரசு பேச மறுக்கிறது. சமூகநீதியைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி முதலமைச்சராக உயர்ந்தார்; ஆனால் திமுகவில் குடும்ப வாரிசுகள் மட்டுமே மேலேறுகிறார்கள்” என்றார்.
பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றி அவர், “11 ஆண்டுகளாக பிரதமராக செயல்பட்டு சிறந்த ஆட்சி மற்றும் வரி சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதிமுக வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. 33 பொருட்களுக்கு வரி நீக்கப்பட்டுள்ளது; விவசாயப் பொருள்களின் வரி 18% இலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
திமுக ஆட்சியில் பஸ் கட்டணமும் மின்சார கட்டணமும் பலமுறை உயர்த்தப்பட்டதையும், சிமெண்ட் விலை பன்மடங்கு அதிகரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழகத்தில் கஞ்சா பரவலாக உள்ளது, மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒரு அதிகாரிகள் கூட வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதில்லை, தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினாலும் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இளையராஜா பாராட்டு விழாவின் ஒளிபரப்பை அரசு சன் டிவி வழியாக வழங்கியது குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார். “நான் தான் சிறந்த முதல்வர் என்று அவரே அதனை சொல்லிக் கொள்ளக்கூடாது; அதனை மக்கள் சொல்ல வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
