விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் கூட்டம், அங்கிருந்த ஆடுகளைக் கடித்துக் குதறியதில் 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளவாய்புரம் அடுத்துள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (51). விவசாயியான இவர், உபரி வருமானத்திற்காகத் தனது வீட்டின் அருகே ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடந்த வாரம் தான் சுமார் 16 ஆடுகளைப் புதிதாக வாங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல ஆடுகளை வீட்டின் அருகிலுள்ள கம்பி வலை அமைக்கப்பட்ட தொழுவத்தில் அடைத்துவிட்டுப் பாண்டி உறங்கச் சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில், தொழுவத்தில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டி, ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது, 5-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கம்பி வலைகளுக்குள் புகுந்து ஆடுகளைக் கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனடியாகக் கையில் கிடைத்த கம்பியை எடுத்துக்கொண்டு நாய்களை விரட்டியடித்தார். இருப்பினும், அதற்குள்ளாகவே நாய்களின் கோரப் பற்களுக்கு இரையாகி 13 ஆடுகள் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மீதமுள்ள 3 ஆடுகள் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து வந்த சேத்தூர் கால்நடை உதவி மருத்துவர் கார்த்திக் அவற்றுக்குத் தீவிர சிகிச்சை அளித்தார். கடந்த வாரம் தான் பெரும் முதலீடு செய்து வாங்கி வந்த ஆடுகள் அனைத்தும் ஒரே இரவில் பலியானதால் விவசாயி பாண்டி நிலைகுலைந்து போயுள்ளார். “என் வாழ்வாதாரமே இந்த ஆடுகள் தான், இப்போது அனைத்தும் போய்விட்டது” என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் அண்மைக்காலமாகத் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், அவை கால்நடைகளைத் தாக்குவதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த முறையான கருத்தடை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















