கேரளாவில் ‘மூளையை தின்னும் அமீபா’ எனப்படும் அபூர்வமான தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அமீபிக் மூளைக்காய்ச்சல் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாசுபட்ட நீரில் வாழும் நைக்லேரியா ஃபவுலெரி (Naegleria fowleri) எனப்படும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித உடலில் நுழைந்து மூளைக்குள் சென்றவுடன் திசுக்களை சேதப்படுத்தி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. குளியல், நீந்துதல் அல்லது மாசுபட்ட நீரில் முகம் கழுவுதல் போன்ற செயல்களின்போது இந்த தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
அமீபிக் மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, சளி, குழப்பநிலை போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.
மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்து சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. தொற்றுநோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















