பாகிஸ்தானின் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கடுமையாக சாடியது.
கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “சொந்த குடிமக்கள் மீதே வான்வழி தாக்குதல் நடத்தும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டிருக்கிறது” என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் தியாகி, “இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி, பாகிஸ்தான் இந்த மன்றத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. ஆனால் நிஜத்தில், மனித உரிமைகளை மீறி, தங்கள் சொந்த மக்களைப் பலிகொடுக்கிறது,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும், “இந்தியாவின் நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான், அதை காலி செய்து தங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். உலகம் தடைசெய்த பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, தங்கள் மக்களைப் பொருட்படுத்தாமல் குண்டுவீசும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஏற்க இயலாதவை,” எனக் கூறினார்.