தவெக தலைவர் தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வசித்து வருகிறார். மத்திய அரசு வழங்கிய ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புடன் அவர் அங்கு தங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிஆர்பிஎப் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, “விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்த உடனே போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று வீடு முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர்.
பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த மிரட்டல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி விஜய் வீட்டுக்கு இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விஜய் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே ஏற்பட்ட இந்த இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல், தவெகவினரிடையே புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.