கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதை பார்த்த ஊழியர் முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். இன்று மதியம் ஒரு மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே கோட்டார்போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். கோர்ட் அலுவலகத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. கோர்ட்டு வளாகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அங்கு முழுமையாக மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர் ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நீதிபதி கார்களிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கருவியுடன் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து கோர்ட்டுகளிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.ஈமெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















