சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. கட்சியை தொடங்கி, மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், சமீபத்தில் திருச்சி மற்றும் அரியலூர் பகுதிகளில் மக்களிடம் உரையாற்றினார். அடுத்த கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய் இல்லத்துக்குள் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்ற இளைஞர் இரவு நேரத்தில் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்து, விஜய் மகனின் ஆடைகளை அணிந்து கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தகவல் அளித்ததைத் தொடர்ந்து, விஜய் போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டார். அதனைத் தொடர்ந்து, எவ்வித வெடிகுண்டு அல்லது சந்தேகப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளனவா என உறுதிப்படுத்தும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் இல்லத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தால் விஜய் வீட்டுப் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், விஜய்க்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா என்ற ஆர்வம் நிலவுகிறது.