திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம்: அரசு அதிகாரிகள் போலி உர விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்பு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் அமர்ந்து முற்றுகை போராட்டம்…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கான போலி உரங்கள் புலக்கத்தில் இருந்துவருவுதாகவும், இதுகுறித்து ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் போலி உரங்கள் விற்பனை செய்யும் கடையினருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலி உரங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது நடவு செய்யப்பட்டுள்ள இளம்பயிர்களின் வளர்ச்சிக்கு அடி உரமாக டிஏபி உரமிடுவது அவசியம். அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரம் வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் தத்தம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளை நாடி உரங்களை வாங்கி வருகின்றனர்.
இதன்படி கடந்த வாரம் கோட்டூர் அருகே உள்ள கோமலபேட்டை எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர் ஒரு மூட்டை டிஏபி உரத்தை ரூ.1400க்கு வாங்கி சென்றுள்ளார். பிரபல உர நிறுவனங்களின் பெயரில் அச்சு அசலாக உருவாக்கப்பட்ட டிஏபி உர மூட்டையினை அவிழ்த்து பயிருக்கு உரம் தெளிக்க முற்பட்டபோது போலியான உரம் என்பது விவசாயிக்கு தெரியவந்துள்ளது. மேலும் அந்த உரத்தை தண்ணீரில் கரைத்துபார்ர்தபோது களிமண் என கண்டறிந்த விவசாயி போலி உரம் குறித்து அருகில் இருந்து விவசாயிகளிடமும், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் கோமலபேட்டை கிராமத்தில் உள்ள தனியார் உரக்கடையினை பெயரளவிற்கு ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள், போலி உர விற்பனை கடை உரிமையாளர் மீது வேளாண் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் உறுதியாக மேற்கொள்ளாததால் மீண்டும் அக்கடை உரிமையாளர் போலி உரங்களை தங்கு தடையின்றி விற்பனை செய்ய தொடங்கினார். இதேபோன்று மேலபனையூர், கீழமருதூர், நல்லூர், அஷேசம், வாட்டார், தலையாயமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 37க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகளிலும் இத்தகைய போலி உரங்கள் விற்பனை செய்துவருவதாக விவசாயிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் போலி உரங்கள் புலக்கத்தில் உள்ளதாகவும் குற்றம்சாட்டும் விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து போலி உரங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை கைது செய்தும், இதற்கு உடந்தையாக இருந்துவரும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலி உரங்களுடன் வந்த விவசாயிகள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் முன்பு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் போலி உர விற்பனை சம்மந்தமாக உரிய விளக்கம் அளிக்காத நிலையில் விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து போலி உர விற்பனையை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு போலி உர மூட்டைகளுடன் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி உரங்கள் விற்பனை செய்வதை தமிழக முதல்வர் தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும், போலி உரம் விற்பனை செய்யும் கடை உரிமையாளரை கைது செய்யவேண்டும், இதனை அனுமதித்த வேளாண் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விவசாயிகள் போராட்டதை கைவிட்டு கலைந்துசென்றனர்.
பேட்டி: கண்ணன், விவசாயி, கோட்டூர் மேலபனையூர் கிராமம்.
