புதுச்சேரி மாநில பாஜகவில் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் ஹேமமாலினி, இவர் இன்று காலை கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார், அப்பொழுது மருத்துவமனையில் இருந்த திருநங்கைகளை ஹேமமாலினி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் இதனை தட்டி கேட்ட திருநங்கைகளை ஹேமமாலினி ஆதரவாளர்கள் வண்டியின் சாவியை பிடுங்கி கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ஹேமமாலினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாஜக தலைமை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநங்கைகளின் கூட்டமைப்பு தலைவி ஷீத்தல் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் புதுச்சேரி முழுவதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு ஹேமமாலினியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சம்பவம் அறிந்து பாஜக அலுவலகம் வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
திருநங்கைகளை அவதூறாக பேசிய பாஜக மாநில செயலாளர் ஹேமமாலினியை கண்டித்து திருநங்கைகள் திடீரென பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.