சென்னை :
கூலி திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம், ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்பட வெற்றியை முன்னிட்டு பல்வேறு துறைகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினியை சந்தித்தார். அப்போது, விநாயகர் சிலை ஒன்றை பரிசாக வழங்கியதோடு, இருவரும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூலி வெற்றியுடன் இணைந்து, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரை பயணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த இச்சந்திப்பு அரசியல் வட்டாரங்களிலும், சினிமா உலகிலும் கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்த விரிவான விளக்கத்தை விரைவில் நயினார் நாகேந்திரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.