தமிழகத்தில் பாஜகவுக்கு அரசியல் வாய்ப்பு இல்லை என்பதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறவுள்ள “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்திருந்த கனிமொழி எம்.பி, செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பல்லடத்தில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மதியத்திலேயே அவர்கள் புறப்பட்டு இரவு முடிவதற்குள் வீடு திரும்பும் வகையில் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநாட்டு திடலில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள், வருகை வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எந்த பகுதிகளில் இருந்து பெண்கள் வர வேண்டும் என்பதும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும் மகளிருக்காக மருத்துவ வசதிகள், அவசர மருத்துவ சேவைகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை சந்திக்கும் இயக்கம் அல்ல என்றும், தொடர்ந்து மக்களை நேரடியாக சந்தித்து வரும் இயக்கம் என்றும் கனிமொழி வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுடன் நேரடி தொடர்பை திமுக தொடர்ந்து பேணிவருவதாகவும், தேர்தல் காலங்களில் மகளிர், இளைஞர் உள்ளிட்ட அணிகளின் மாநாடுகள் நடத்தப்படுவது வழக்கமான அரசியல் செயல்பாடுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி உடையும் என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அது அவருடைய ஆசையும் கற்பனையும் என்றும், கனவு காண அவருக்கு உரிமை இருப்பதாகவும் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அரசியல் இடமில்லை என்பது உறுதியான உண்மை என்றும், அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

















