திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய்க்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயம் அமைக்கப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய், கடந்த சில வாரங்களாக வண்ணமயமான வெளிநாட்டுப் பறவைகளின் புகலிடமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட அரிய வகை ‘செங்கால் நாரைகள்’ (White Storks) நடப்பு வலசை காலத்தில் இங்கு அதிக அளவில் குவிந்துள்ளன. ஐரோப்பாவில் உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களில் பிரம்மாண்டக் கூடுகளைக் கட்டி இனப்பெருக்கம் செய்யும் இந்தப் பறவைகள், கடும் குளிரைத் தவிர்க்க ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு வலசை வருவது வழக்கம். தமிழகத்திற்கு இரை தேடி வரும் இவை, இங்குள்ள நீர்நிலைகளில் காணப்படும் மீன் மற்றும் சிறு உயிரினங்களை உண்டு தங்களது வாழ்நாளைக் கழிக்கின்றன.

நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய்க்குப் பறவைகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது செங்கால் நாரைகளுடன் இணைந்து, ‘சின்ன கொக்கு’ எனப்படும் சிறு வெண் கொக்குகள், நண்டுண்ணி உள்ளான், சிவப்பு மூக்கு ஆள்காட்டி மற்றும் சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பறவை இனங்கள் இக்கண்மாயில் முகாமிட்டுள்ளன. அதேபோல், அருகிலுள்ள செங்குளம் கண்மாயிலும் பறவைகளின் நடமாட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு சில பறவைகள் வலசை காலம் முடிந்த பின்பும், இங்கேயே தங்கி விடுவது இந்தப் பகுதியின் தட்பவெப்பநிலை பறவைகளுக்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்கிறது.

திருத்தங்கல் பகுதியில் உள்ள நீர்நிலைகள் பறவைகளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளதால், இப்பகுதியை முறைப்படி ‘பறவைகள் சரணாலயமாக’ அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது குறித்துப் பறவை ஆர்வலர்கள் கூறுகையில், “உறிஞ்சிகுளம் கண்மாய்க்கு வரும் பறவைகளைப் பாதுகாப்பதன் மூலம் இப்பகுதியின் உயிர்ச்சூழல் மேம்படும். சரணாலயம் அமைக்கப்படுவதன் மூலம் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படுவதுடன், வேட்டையாடுதல் போன்ற சமூக விரோதச் செயல்களும் கட்டுப்படுத்தப்படும். மேலும், இது சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதி மாணவர்களுக்கு ஒரு சிறந்த இயற்கை கல்வி மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அமையும்” எனத் தெரிவித்தனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இக்கண்மாய்களைப் புனரமைத்து, பறவைகள் சரணாலயம் அமைத்தால், வருங்காலங்களில் இன்னும் அரிதான பல வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வர வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version