இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு கொண்டு வருவதற்காக இன்டர்போலின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக கோருவதற்கான நடவடிக்கைகளை வங்கதேச அரசு தொடங்கியுள்ளது.

மாணவர்களின் தீவிர எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, ஆட்சியும் அதிகாரமும் சரிந்த நிலையில் ஹசீனா நாடு விட்டு வெளியேறினார். பின்னர் அவர் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு வளையத்துக்குள் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த போராட்டங்களின் போது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக ஹசீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை வழங்கியது. இதே வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்சாமான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேசம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இதனை முன்னிட்டு, கைது வாரண்ட் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை இன்டர்போலுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தின் கோரிக்கையை இன்டர்போல் எந்த விதத்தில் பரிசீலிக்கிறது என்பது குறித்து விரைவில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version