போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாதியாதார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் ‘சமத்துவ நடைபயணம்’ தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை முன்னிட்டு, சென்னை மதிமுக தலைமையகத்தில் பங்கேற்பாளர்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, போதைப்பொருள் குற்றங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் வகையில் தண்டனைகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருப்போருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதை பயன்படுத்துபவர்களுக்கு 7 ஆண்டு தண்டனையும் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அத்துடன், கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான அமைப்புகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், சாதி–மத மோதல்கள் நடக்காத சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.
தனது சமத்துவ நடைபயணத்தில் புகைப்பிடிப்பவர்களும், மதுபானம் அருந்துபவர்களும் எந்த நிலையில் இருந்தும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

















