இஸ்லாமியர்களின் ஹஜ் புனிதப்பயணத்தை நிறைவுசெய்யும் விதமாக பக்ரீத் பண்டிகை தியாகத்திருநாளாகக்கொண்டாடம்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தை நிறைவு செய்யும் விதமாகவும், இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​ மயிலாடுதுறை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து பக்ரீத் பண்டிகையை மிகவும் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான மயிலாடுதுறை, நீடூர், மேலச்சாலை, வடகரை, தைக்கால் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் புத்தாடை அணிந்து, தனித்தனியாகப் பங்கேற்று பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
​தொழுகை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உலக அமைதிக்காகவும், மனிதநேயம் தழைத்தோங்கவும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் கையேந்தி துவா செய்தனர்.

தொழுகை முடிந்த பின், அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பக்ரீத் வாழ்த்துகளை நெகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டனர்.
​தியாகத் திருநாளின் முக்கிய நிகழ்வாக, ஆடு மற்றும் மாடுகளை இறைவனின் பெயரால் ‘குர்பானி’ கொடுத்து பலியிட்டனர். அவ்வாறு பலியிடப்பட்ட இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து… ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை எளிய மக்களுக்கும் தர்மமாக வழங்கி மகிழ்ந்தனர். மீதமுள்ள மூன்றாவது பங்கைத் தங்களின் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
​பகிர்ந்துண்ணும் உன்னத நெறியைப் பறைசாற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரியாணி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு, பக்ரீத் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Exit mobile version