பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய விழிப்புணர்வு பேரணி

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய விழிப்புணர்வு பேரணியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பு. பரங்கிப்பேட்டையில் கடல்பகுதியில் எரிவாயு கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என டிஎன்டிஜே மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்:-

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற பேரணி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கி பிரதான சாலைகளின் வழியாக சென்று சின்னக்கடைத்தெருவில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக டிஎன்டிஜே மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் காமுகர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கண்டன பேரணி நடத்தி வருகிறோம். போக்ஸோ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 25,000-க்கு மேற்பட்ட சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசும் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டிஎன்டிஜே நடத்தும் பேரணிக்கு பல்வேறு இடங்களில் தடை விதிப்பதன்மூலம் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடற்பகுதியில் 5-க்கு மேற்பட்ட எரிவாயு கிணறுகள் தோண்ட இந்துஸ்தான் நிறுவனம் முயற்சிக்கிறது. இது சுற்றுச்சூழல், வேளாண்மை, கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த விபரத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இஸ்லாமியர்களின் 3.5 இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார். இந்த பேரணியில் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Exit mobile version