மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து ஒரு நாளைக்கு நாலு முறை என எட்டு ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் செயல் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.
ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் , பயணிகளுக்கு பாதுகாப்பான பயண முறைகள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும் ரயில் பயணிகள் விபத்துக்களில் சிக்குவதும், திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜி என்பவர் ரயிலில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து தினந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ரயிலின் படிக்கட்டுகளில் நிற்பதை தவிர்க்கவேண்டும், ஜன்னல் ஓரமாக அமரும்போது எச்சரிக்கையாக இருப்பது, நகைகள் அணிந்து பயணம் செய்யும்போது கவனம் செலுத்துவது, படியில் அமர்ந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும், போன்ற அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பேசி பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று தினந்தோறும் நடை மேடைகளில் பயணிகள் கூட்டம் உள்ள இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு நாளைக்கு நான்கு முறை என எட்டு வருடங்களாக ரயில் பயணிகளிடம் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்ய வலியுறுத்தி பேசி வருவது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது. விபத்தில் காயம்படுபவர்கள், விழிப்புணர்வு இல்லாமல் நகைகளை தொலைத்து விட்டு பரிதவிக்கும் பயணிகளை பார்த்து இதுபோல் பயணிகள் யாரும் பாதிக்க கூடாது என்பதற்காக பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புவதால் முழு மனதுடன் தினந்தோறும் பாதுகாப்பாக பயணம் செய்யும்படி பயணிகளிடம் அறிவுறுத்தி வருவதாகவும் காவல் உதவி ஆய்வாளர் ராஜி மனநிறைவுடன் தெரிவித்தார்.
