“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு வெளிப்படையாக மிரட்டல்களில் ஈடுபடுகிறது,” என தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய வீடியோ வெளியானது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த நயினார் நாகேந்திரன், “அரசை புகழ்ந்து பேசும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று நிர்பந்திப்பது, திமுக அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
மேலும், வடகிழக்குப் பருவமழை நெருங்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணித்து, விளம்பர அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். உண்மையை வெளிப்படுத்தும் ஊடகங்களை மிரட்டும் திமுகவின் “திராவிட மாடல் ஆட்சி” இனியும் செல்லாது என அவர் எச்சரித்தார்.
“பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற, தேவையானால் வீதியில் இறங்கி போராட பாஜக தயங்காது,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.