யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவர்களுக்கு  தனி  உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து வெற்றியை பாதிக்கச்செய்வோம் என கோகுல மக்கள் கட்சி மற்றும்  யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் கோகுல மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி யாதவர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழகத்தில்  யாதவர்கள்  2 தலைமுறைகளாக  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள யாதவர்களுக்கு  தனி உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி நீண்ட காலமாக போராடி வருகிறோம். யாதவர்கள் கல்வியில் பின்தங்கிய காரணத்தால் வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். திமுக  அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதாக குற்றம் சாட்டினார்.  மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி யாதவர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.  வருகிற 2026 சட்டமன்றத்தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 100 வேட்பாளர்களை புல்லாங்குழல் சின்னத்தில் நிறுத்தி திமுகவுக்கு சாதகமான வாக்குகளை பிரித்து காட்டுவோம்  என்றும், எனவே யாதவர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் எங்களின் பலத்தை காட்டுவோம் என்றும் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் தெரிவித்தார்.  இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  200-க்கும் மேற்பட்ட யாதவர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version