திறந்தவெளியில் இயங்கும் திருப்புங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணி தாமதம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திறந்த வெளியில் செயல்படும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்புங்கூர், கற்கோவில், தொழுதூர், கன்னியாகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த தங்களுடைய குறுவை நெல் மூட்டைகளை இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அளவு பணியாளர்கள் இல்லாததால் தினமும் குறைவான நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடந்த 10 நாட்களாக கொண்டு வந்து வைக்கப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி முளைக்கும் நிலையில் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் எங்கு உள்ளது தரைத்தளம் ஏதும் இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்து கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மழையில் நனையாமல் விவசாயிகள் தார்ப்பாயை கொண்டு நெல்லை மூடி வைத்தாலும் தரைத்தளம் இல்லாததால் மழை நீர் மண் தரை வழியாக உட்புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என வேதனையோடு தெரிவித்தனர்.