தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து மொத்தம் 331 மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகளை ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில், ஆண்டிபட்டி தாலுகா புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட மல்லையகவுண்டன்பட்டி ஆதிதிராவிடர் காலனி மக்கள் அளித்த மனு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பாண்டியராஜன், பால்ராஜ், சுரேஷ் உள்ளிட்டோர் தலைமையில் வந்திருந்த கிராம மக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாததாலும், கட்டிடத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாலும் தற்போது அந்த வீடுகள் ஆங்காங்கே இடிந்து விழுந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே வசிக்கிறோம். எனவே, பாதுகாப்பற்ற அந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகளைக் கட்டித் தர அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
இதேபோல், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சி தர்மலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெய்வேந்திரன் தலைமையில் ஒரு மனு அளித்தனர். அதில், தங்கள் கிராமத்தில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள பொது மயானத்தைச் சிலர் ஆக்கிரமித்துக் குடிசைகளை அமைத்துள்ளதாகவும், இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யச் செல்லும்போது தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மயான நிலத்தை மீட்க வேண்டும் எனக் கோரினர். மேலும், சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகி கவுதம் அளித்த மனுவில், உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலித்த ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

















