திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வைணவத் தலங்களில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் வழியாகப் பெருமாளைத் தரிசிப்பது பிறவிப் பயனைத் தரும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியாகப் பெருமாள் வெளியே வந்த அந்தப் புனிதமான வேளையில், அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்திப் பெருக்கில் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பெருமாளைத் தொடர்ந்து வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று, தங்கள் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கப் பிரார்த்தனை செய்தனர். பின்னர் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கந்த விலாஸ் உரிமையாளர் என். செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் நேரு, சாய் கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுப்புராஜ், பெரிய நாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், மற்றும் சம்பத் ஐய்யங்கார், சீனிவாசன் ஐயங்கார், கார்த்திக் ஐய்யங்கார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழனி நகர் முழுவதும் ஆன்மீகக் களைகட்டியிருந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளைக் காவல்துறையினர் முறையாக மேற்கொண்டிருந்தனர்.

















