சென்னை : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விஜய்யை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கரூர்-ஈரோடு சாலையில் நடைபெற்ற ‘வெளிச்சம் வெளிவரட்டும்’ பொதுக்கூட்டத்தில், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமானோர் திரண்டனர். தாமதம், அனுமதியற்ற வாகன நிறுத்தம், மின்சாரம் துண்டிப்பு, பாதுகாப்பு குறைபாடு போன்ற பல காரணிகள் ஒருங்கிணைந்து பேரதிர்ச்சியான நெரிசலை ஏற்படுத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்ததோடு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் த.வெ.க மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “கரூர் துயரத்திற்கு விஜய்தான் காரணம்” எனக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் சென்னையிலும் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவரை கைது செய்ய கோரியும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, போராட்டம் நடைபெறும் சூழலை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
