பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு:- கல்வி மற்றும் கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறையை சேர்ந்த எட்டு பேர் உள்ளிட்ட 20 பேர் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்:-
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னாலான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை தொல்லியல் துறை கல்வி மற்றும் கடல் சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன் தலைமையில், தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், துணை இயக்குனர் யத்தீஷ்குமார், மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்ளடக்கிய வல்லுநர் குழு அடங்கிய 20 பேர் பூம்புகார் கடலில் கடல் சார்ந்த வரலாற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலில் இருந்து ஐந்தரை கிலோமீட்டர் தூரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் இந்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தஇதுகுறித்து ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் கேட்டபோது பதில் கூற மறுத்து விட்டனர். பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
