தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி விழா’ வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்த்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பர் பெருமானுக்கு. சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.