சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து இன்று (ஜூலை 24) அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணம், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகளே என்று தெரிவித்துள்ளனர். இதை சரிசெய்யும் வகையில், இன்று காலை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை குழுவின் தலைவர் டாக்டர் செங்குட்டுவேலு உள்ளிட்ட இதய நிபுணர்கள் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையுடன், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் இன்று நடைபெற்றது. அந்த பரிசோதனை முறையாக மற்றும் இயல்பாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தற்போது நலமாக உள்ளார். இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும், அவருக்கு கவலைக்கிடமான எந்தவிதமான உடல்நிலை சிக்கலும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.