சென்னை: பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்; எதிர்பாராததும் நடக்கும்” என்ற அவரது பதில், திமுக கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பு இருக்கலாம் என்ற ஊகத்தை எழுப்பியுள்ளது.
தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என அறிவித்தார். அதே நேரத்தில், அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி பேசியது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
“அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா, எந்த அடிப்படையில் கூட்டணி பேசினார் என்பதே எனக்கு தெரியாது. நான் தொடங்கிய கட்சிக்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை. கடும் எதிர்ப்புகளை மீறி அன்புமணியை அரசியலில் கொண்டு வந்து, மத்திய அமைச்சராக உயர்த்தினேன். ஆனால் இன்று அவர் செய்த செயல்கள் பாமகவுக்கு பாதகமாக உள்ளது” என ராமதாஸ் கூறினார்.மேலும், “என் அனுமதி இல்லாமல் கூட்டணி பேசியது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. பாமக சார்பில் கூட்டணி பேசும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. நான் அமைக்கும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புமணி அறிவித்துள்ள அதிமுக கூட்டணி குறித்து பேசும் போது, “அந்த கூட்டணியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள்” என ராமதாஸ் கடுமையாக சாடினார்.
அதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி குறித்து ராமதாஸ், “நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது” எனக் கூறியது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்த திமுக அரசை அவர் வரவேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதை தவிர்த்து வருவதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருமாவளவன் இடம்பெற்றுள்ள கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்விக்கு, “எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” என ராமதாஸ் பதிலளித்தார். இந்தக் கருத்து, அன்புமணிக்கு மாற்றாக ராமதாஸ் திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்திருந்த சமயத்தில் அரசியல் சூழல் மேலும் சூடுபிடித்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவர் சந்தித்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். அதன் மறுநாளே, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, அதிமுக–பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டணியை “நாடக கூட்டணி” என விமர்சித்த டாக்டர் ராமதாஸ், தன்னைக் கலந்தாலோசிக்காமல் நடத்தப்பட்ட பொதுக்குழு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும் குற்றம்சாட்டினார். இதனை ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருளும் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார். மொத்தத்தில், பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டு மோதலும், ராமதாஸின் “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” என்ற கருத்தும், தமிழக அரசியல் களத்தில் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றன.

















