திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் நோக்கமாக கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், அவர்கள் தொடங்கி வைத்தார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் நாஷா முக்த் பாரத் அபியான் (Drug-Free India Campaign) திட்டத்தின் 5ஆம் ஆண்டு விழா இன்று நாடளாவிய அளவில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இது தீவிரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கூடும் வளாகங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்பு ணர்வை உருவாக்க முனைப்பாக செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தனது உரையில், “ஒழுக்கம் என்பது வெற்றிக்கான முதன்மையான திறவுகோல். மாணவர்கள் உயர்நிலைக்கு செல்ல வேண்டுமானால் போதைப்பொருளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் அவர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும், மாணவர்கள் தங்கள் சுற்றத்திலுள்ளோரில் யாரேனும் போதைப் பழக்கத்துக்கு ஆளாக இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நல அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷா முக்த் பாரத் அபியான் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து “போதைப்பொருள் இல்லாத திண்டுக்கலை உருவாக்க வேண்டும்” என ஆட்சியர் அழைப்பு விடுத்தார். போதைப்பொருள் மற்றும் மதுப் பொருட்கள் ஏற்படுத்தும் உடல்–மன அழிவுகள் குறித்து விளக்கும் மடிப்பேடுகளை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர் தே. ஜெயந்தி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மகாலட்சுமி, திருமதி அருணா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) அ. சக்திவேல், சிறப்பு சிறார் காவல் பிரிவு சமூகப்பணியாளர் லோ. ஜெரோம் லாசரஸ், குழந்தை உதவி மைய ஒருங்கிணைப்பாளர் திரு நிக்கோலஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

















