அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த அதுல்யா என்ற பெண் தனது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணமடைந்த அதுல்யா (வயது 29) கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜசேகரன் பிள்ளை – துளசிபாய் தம்பதியரின் மகள் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது கணவர் சதீஷுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
தொடர்ந்து, ஜூலை 19ம் தேதி அதுல்யா தனது வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது தாயார் கேரளா போலீசில் புகார் அளித்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரில், “2014ம் ஆண்டு திருமணத்துக்குப் பின் தொடர் வரதட்சணை கேட்டு சதீஷ் என் மகளை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். ஒரு பைக்குடன் 43 சவரன் நகை கொடுத்திருந்தாலும், மேலும் பணம் கேட்டு தாக்குதல் நடத்தி வந்துள்ளார். வயிற்றில் உதைத்தும், குரல்வளையை நெறித்தும், சாப்பிடும் தட்டால் தலையில் தாக்கியும் கொடுமை செய்துள்ளார். இதனால் தான் என் மகள் உயிரிழந்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
அதுல்யாவின் தந்தை ராஜசேகரன் பிள்ளை கூறியதாவது: “சதீஷ் குடிப்பழக்கத்தால் என் மகளை அடிக்கடி அடித்து பீடித்துள்ளார். ஒரு தடவை, அதுல்யாவை அவரிடமிருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்தோம். பின்னர் சதீஷ் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் அனுப்பிவைத்தோம்,” என்றார்.
சம்பவம் தொடர்பாக சதீஷ், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து வருகிறார்.
இதற்கு முன்னதாக, ஷார்ஜாவில் மற்றொரு கேரள பெண் விபன்ஜிகா (32) மகளுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரும் வரதட்சணை கோரிய கணவர் கொடுமையால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
அடுத்தடுத்த மர்ம மரணங்கள், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சடலமாக மீட்கப்படும் சம்பவங்கள், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.