மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்காக தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதிகள் எங்கு செல்கின்றன என்பது தொடர்பாக தமிழக அரசிடம் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், கோடந்தூர் அருகேயுள்ள திருமூர்த்திமலை கிராமத்தில் பழங்குடியின மக்களின் துயர நிலையை கண்டு வருத்தம் தெரிவித்த அவர், “காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழ முடியாத அளவிற்கு சிதிலமடைந்துள்ளன. மின், குடிநீர், சாலை வசதி இல்லாமல் உயிருக்கு ஆபத்தான சூழலில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகளை பலமுறை தெரிவித்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என குற்றம்சாட்டினார்.
பழங்குடியினர் நல ஆணையம் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறைக்கு, வருவாய்த் துறை பரிந்துரை செய்ததாகவும், 110 வீடுகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் எந்த நிதியோ நடவடிக்கையோ இல்லை என்பதும் அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “பிரதமர் வீடுகள் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற சாலை திட்டம் போன்ற மத்திய நிதி உதவிகள் எங்கே செல்கின்றன? ஏன் இந்தத் திட்டங்கள் மக்களுக்கு போய்ச்சேரவில்லை?” எனக் கேட்டுள்ளார்.
2022 வரை உள்ளாட்சித் தேர்தலில்கூட புறக்கணிக்கப்பட்ட திருமூர்த்திமலை மக்கள், முதன்முறையாக வாக்களித்து ஒருவரை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தும் அவர்களின் வாழ்க்கை மாற்றமடையவில்லை என்பதும் கவலைக்கிடமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மலைவாழ் மக்களின் நலனுக்காக உடனடியாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, தமிழக அரசே நேரடியாக பொறுப்பு ஏற்பட வேண்டும்,” என்றும், “மற்ற மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களிலும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.