பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவர் அன்புமணி ராமதாஸை, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் தந்தை–மகன் இடையேயான மோதல் நீண்ட நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, கட்சி பொறுப்புகள் என பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான பிளவாக மாறியது. இடையே, போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கூட பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றுக்கு ஆகஸ்ட் 31க்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால், மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டாவது நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதற்கும் அவர் பதிலளிக்காததால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உரிய விளக்கம் அளிக்காததால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. அதனால் அன்புமணி பாமக செயல்தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “அன்புமணி தலைமைக்குக் கட்டுப்படாமல், பாமக வளர்ச்சிக்கு தடையாகச் செயல்பட்டார். மூத்தோர் அறிவுரைகளைக் கேட்கவில்லை. தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டார். அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது. பாமக உறுப்பினர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது” என கடுமையாக எச்சரித்தார்.
இதனுடன், பாமகவின் தந்தை–மகன் பிளவு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

















