தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு கதவுகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் மிக முக்கியமான நிர்வாக மையமாக விளங்கும் ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்ட அலுவலகத்தின் தரைத்தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச் செல்லும் பிரதானப் பாதையும் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பாதையில் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தின் ‘சன் சைடு’ (Sunside) சிலாப்கள் எதிர்பாராத விதமாக இடிந்து கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, மேலும் கட்டிட இடிபாடுகள் விழக்கூடும் என்ற அச்சத்தினால், முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலகத்திற்குச் செல்லும் பாதை மற்றும் இருசக்கர வாகன நிறுத்தத்திற்குச் செல்லும் வழிகள் அனைத்தும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும், அன்றாடப் பணிகளுக்காக ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களும் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர். போதிய இடவசதி இல்லாததால், அலுவலக வளாகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டது.
கட்டிடத்தின் இந்தப் பகுதி திடீரென இடிந்து விழுந்தது குறித்துத் தகவல் தெரிவித்த வருவாய்த்துறை அலுவலர்கள், “சிலாப்கள் இடிந்து விழுந்த பகுதிக்கு அருகிலேயே கழிப்பறைகள் அமைந்துள்ளன. அவற்றிலிருந்து நீண்ட நாட்களாக ஏற்பட்ட கசிவு காரணமாகவோ அல்லது போதிய பராமரிப்பு இல்லாததாலோ சிமெண்ட் பூச்சுகள் பலவீனமடைந்து இடிந்து விழுந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்திலேயே இத்தகைய விபத்து நேரிட்டிருப்பது ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

















