இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்பின் பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா, சர்வதேச மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணியில் அறிமுகமான மிஷ்ரா, 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாராட்டைப் பெற்றார்.
22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய மிஷ்ரா, ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், “இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். என் அனுபவம் நிச்சயமாக அவர்களுக்கு உதவும்” என தெரிவித்துள்ளார்.
அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.















