விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் – தவெக தொண்டர்கள் வழி ஏற்படுத்தி அனுப்பினர் !

திருச்சி :
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் விஜய்யின் வாகனம் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலின் காரணமாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஸ்தம்பித்தது. சைரன் ஒலித்து திணறிய நிலையில் இருந்த ஆம்புலன்ஸுக்கு தவெக தொண்டர்கள் உடனடியாக வழி ஏற்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அதே சமயம், கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிக அளவில் திரண்டதால், விஜய்யின் வாகனம் விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிக்குச் செல்ல பெரும் தாமதம் ஏற்பட்டது. காலை 10.35 மணிக்கு காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நிகழ்விடத்துக்குச் செல்ல இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.

இதற்கு முந்தையதாக, அதிமுக பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. வேலூரில் நடைபெற்ற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், “ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளி இல்லாமல் கூட்டங்களில் வந்துகொண்டிருக்கின்றன” என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் துறையூரில் நடந்த பிரசார கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸை தாக்கியதில், டிரைவர் மற்றும் கர்ப்பிணிப் பெண் உதவியாளர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், திருச்சியில் விஜய் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொண்ட தவெக தொண்டர்களின் நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அதிக போக்குவரத்து காணப்படும் சாலைகளில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் அனுமதி வழங்கப்பட்டால், அவசரகால வாகனங்கள் – 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் மீட்பு வாகனங்கள் – தடையின்றி செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version