புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியின் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கிறது என்ற தகவல் சமூகத்தில் பரவியது. இதுகுறித்து, அந்தக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெறும் எழுச்சியை தடுக்கவே, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சில ஊடகங்கள் பரப்பி வருகின்றன. புதுச்சேரியில் எங்களது கட்சி கூட்டணி நடத்துவதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
மேலும், புதுச்சேரி மாநில பொறுப்பாளர்களின் விவரங்களை விரைவில் கழகத் தலைவர் அறிவிப்பார். தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் வகையில் யூகத்தின் அடிப்படையில் பொய்ச் செய்திகள் வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.