அஜித்குமார் கொலை வழக்கு : நிகிதா அளித்த நகை புகார் பொய்யா ? – சிபிஐ சந்தேகம்

தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில், பேராசிரியர் நிகிதா அளித்த நகை மாயம் தொடர்பான புகார் பொய்யாக இருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது.

ஆரம்பத்தில், “காளி கோயிலுக்கு அம்மாவுடன் சென்றபோது, அஜித்குமார் கார் சாவியை கேட்டு நிறுத்தினார். நான் சாமி தரிசனம் முடித்து வந்தபோது, காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது” என்று நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட பின், நிகிதாவிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதில், காரை ஒரே நபர் பார்க்கிங் செய்யவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. நிகிதா, “நீண்ட நேரம் கழித்து தான் கார் சாவி திரும்பக் கிடைத்தது” என்று கூறி வந்த நிலையில், அவர் இரண்டு முறை கார் சாவியை வழங்கியிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில், அருண்குமார் நிகிதாவின் காரை இரண்டு நிமிடங்களில் பார்க்க் செய்தார். பின்னர் அஜித்குமார் சாவியை நிகிதாவிடம் திருப்பிக் கொடுத்தார். அதன் பின், காரை வெளியே எடுப்பதற்காக நிகிதா சாவியை கோயில் ஊழியர் கண்ணனிடம் கொடுத்தார். கண்ணன் அதை அஜித்குமாரிடம், அவர் தினகரிடம் கொடுத்ததில், தினகர் எட்டு நிமிடங்களில் காரை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்தினார்.

சிபிஐ விசாரணையில், கோயில் பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லாதது உறுதியானது. இதனால், நிகிதா அளித்த நகை மாயம் புகார் உண்மையல்ல என சிபிஐ சந்தேகிக்கிறது. தற்போது, நிகிதா சென்னையில் அந்த நகைகளை வாங்கியதாக அளித்த தகவலின் அடிப்படையில், விசாரணை அந்த திசையில் முன்னேறி வருகிறது.

Exit mobile version